ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் வழங்கப்பட்ட மதிய விருந்துபசார நிகழ்வின்போது இச்சந்திப்பு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுச்சபை கூட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டு மணித்தியாலய விவாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன ஜனாதிபதி ஷி ஷின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹாணி, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கொய்ஸ் ஹொலண்டே ஆகியோர் உரைநிகழ்த்தியுள்ளனர்.
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் 193 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் முதலாவது ஆசனம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படுவது வழமை. அந்தவகையில் இம்முறை துவாலு நாட்டிற்கு முதலாவது ஆசனம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய நாட்டின் உறுப்பினர்களுக்கு அகர வரிசையின் பிரகாரம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில், நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.