Breaking News

ஊழல், நிதிக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவவுள்ளது அமெரிக்கா

இலங்கையில் ஊழல் மற்றும் ஏனைய நிதிக் குற்றங்களுக்குக்கு எதிராகப் போராடுவதற்கு, உதவும் 2.6 மில்லியன் டொலர் திட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.இந்த உடன்பாட்டின் படி, விசாரணை, மற்றும் குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், எல்லா குடிமக்களுக்கும் நீதி வழங்குவதை முன்னேற்றுவதற்காக இலங்கையின் குற்றவியல் நீதித்துறை அதிகாரிகளின் ஆற்றலை அதிகப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கவுள்ளது.


எந்தவொரு ஜனநாயகத்திலும், நியாயமான, சமத்துவமான நீதி முறை முக்கியமானது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இதன் போது தெரிவித்துள்ளார்.

அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப, இலங்கையின் நீதித்துறை ஆற்றலை வலுப்படுத்தவும், அமெரிக்கா தனது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் பகிர்ந்து கொள்ளும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.