ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன?
இலங்கையில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.
நேற்று முன்தினம், நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போதே அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.
அனைத்துலக சமூகத்துடனான ஈடுபாட்டை இலங்கையின் புதிய அரசாங்கம் புதுப்பித்துக் கொண்டதற்கும், இலங்கை ஜனாதிபதியிடம் ஜோன் கெரி பாராட்டுத் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கொழும்புக்கு மேற்கொண்ட, பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில், நேற்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இலங்கையில் நீதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் தலைமையில், இலங்கை மக்களால், ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் நம்பகமான உள்நாட்டுச் செயல்முறைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் ஜோன் கெரி இதன் போது தெரிவித்துள்ளார்.
மேலும், சுத்தமான சக்தி மூலங்களை உருவாக்குதல், காலநிலை மாற்றங்கள் குறித்த ஒத்துழைப்பை அதிகரித்தல் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.a