கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் குரைக்கும் நாயைப் போன்றது. அறிக்கைகளை வெளிப்படுத்தியும் கட்டளைகளை பிறப்பித்தும் ஒருநாட்டை அச்சுறுத்துவதுடன் முடிந்துவிடும் என தூய்மையான ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிரி மகிழ்ச்சியாக இருந்தால் நாம் கவனமாக செயற்பட வேண்டும். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகழ்ச்சியாக செயற்படுவது நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் பாரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் வரவிருக்கும் இறுதி முடிவு இந்த நாட்டை எந்தவகையில் பாதிக்கப் போகின்றது என்பதில் இன்று நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இப்போது நாட்டுக்கு எதிராக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதில் பாரிய சிக்கல் நிலைமை எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைபை இலங்கை ஏற்றுக்கொண்டதில் இருந்தே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவென்பது தெளிவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுத்த வேளையிலும் மின்சாரக் கதிரை கதைகளை கூறியபோதும் அவை அனைத்தும் பொய்யென ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ மக்களின் ஆதரவை பெறவே இவ்வாறான கதைகளை கூறுவதாகவும் கூறினார்கள்.
ஆனால் இப்போது அதிகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் இருக்கும் போது மின்சாரக் கதிரைக்கு செல்லவிடாது மஹிந்தவை காப்பாற்றியது நான் என புகழாரம் சூட்டுகின்றார். அன்று இல்லாத மின்சாரக் கதிரை கதைகளுக்கு இன்று உயிர் கொடுக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் உண்மை நிலைமையையோ அல்லது சர்வதேச நாடுகளுடன் இந்த அரசாங்கம் செய்யும் உடன்படிக்கைகளையோ இலங்கை மக்கள் அறியவில்லை. இலங்கையின் ஊடக சுதந்திரம் இன்று முழுமையாக பறிக்கப்பட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையை பறித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நகர்த்தும் சதித்திட்டத்துக்கு இலங்கை அரசாங்கமும் துணை போகின்றது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இவர்கள் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்.
இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முயற்சிக்கின்றது. அவ்வாறு ஒரு நாட்டின் மீது விசாரணைகளை மேற்கொள்வதாயின் முதலில் இஸ்ரேல் மற்றும் அமெரிகாவின் மீதே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஏனைய நாடுகளில் அவர்களது தலையீடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும். மனித உரிமைகள் பேரவை என்பது குரைக்கும் நாயைப் போன்றது. இவர்கள் அறிக்கைகளை வெளிப்படுத்தியும் கட்டளைகளை பிறப்பிப்பதோடு முடிந்து விடும்.இவர்களால் எந்தவொரு நாட்டின் மீதும் நேரடியாக தலையிட முடியாது. ஒரு நாட்டின் மீது அழுத்தங்களை கொடுக்கவும் அந்த நாட்டின் மீதான விசாரணைகளை மேற்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பாதுகாப்பு சபையினால் மட்டுமே முடியும். ஆயினும் ரஷ்யா,சீனா ஆகிய நாடுகளின் நேரடி தலையீடு இருப்பதன் காரணத்தினால் இந்தவொரு நாட்டையும் இவர்கள் கட்டுப்படுத்த முடியாது.
மேலும் இலங்கையின் பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத செயற்பாடுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களது தமிழீழ கொள்கையில் இன்றும் மாற்றம் இல்லை. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் இவர்களது செயற்பாடுகள் பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிரி மகிழ்ச்சியாக இருந்தால் நாம் மிகக்கவனமாக செயற்பட வேண்டும். அதே நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவித தடைகளும் இன்றி அவர்களது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். அதேபோல் சர்வதேச மட்டத்திலும் அவர்களது பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் கவனமாக செயற்பட வேண்டும். ஆனால் இன்று அரசாங்கமே அவர்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க தகுந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றது என்றார்.