சிலியில் அவசர நிலை பிரகடனம் ; ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்வு
சக்திவாய்ந்த நிலநடுக்கம் சிலியை உலுக்கியதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
சிலியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுகக்கத்தில் 11 பேர் உயிரிழந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன் ஒரு மில்லியன் மக்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.3ஆக பதிவாகியதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட கோக்கியும்போவிற்கு சிலி ஜனாதிபதி மிச்சல் பாச்சலேட் விஜயம் செய்து பாதிப்புக்களை நேரில் அவதானித்திருந்தார். இந்த நிலையில் கோக்கியும்போ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டெழும்புவதற்காக சிலியில் இரண்டாவது நாளாகவும் மீட்பு நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளன.