ஜெனிவாவில் அடுத்தவாரம் இலங்கை குறித்த தீர்மானம் முன்வைப்பு
இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான கருத்தொருமித்த தீர்மானம், வரும் 24ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் இணைந்து, அனைத்துலக பங்காளர்களின் அனுசரணையுடன் கருத்தொருமித்த தீர்மானத்தைக் கொண்டு வர விரும்புவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பான முதல் வரைவை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கையளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக, வரும் 30ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.