Breaking News

விக்னேஸ்வரா! கையில் தரப்பட்ட வேலாயுதத்தை எறிந்து சூரரை அடக்கு-வலம்புரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வவுனியாவில் ஆற்றிய உரை அநாகரிகமானதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.

வடக்கின் முதலமைச்சரை குறை கூறுவதாக மாவை சேனாதிராசாவின் உரை அமைந்திருப்பது தமிழ் மக்களிடம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாகாண சபைத் தேர்தலின் போது வடக்கில் போட்டியிட விரும்பிய மாவை சேனாதிராசாவுக்கு அந்த இடம் வழங்கப்படாததில் இருந்து அவர் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது பகை கொண்டார். 

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போதும் விக்னேஸ்வரன் மீதான தனது எதிர்ப்பை மாவை சேனாதிராசா வெளிப்படையாகக் காட்டி நின்றார். இது தவிர, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கின் முதல்வருடன் சந்திக்கவும் கதைக்கவும் மறுத்த போது, மாவை சேனாதிராசா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஓடிச் சென்று சந்தித்தார். 

இவை எல்லாம் விக்னேஸ்வரன் மீது கொண்ட பகை காரணமாக மாவை சேனாதிராசா செய்தவை என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். இந்நிலையில், வடக்கின் முதல்வருக்கு எதிராக சில வால்பிடிகளும் குரல் கொடுக்கத் தலைப்பட்டமை கண்டிக்கத்தக்கது. இத்தகையவர்கள் செய்த மோசடிகள் குறித்து ஊடகங்கள் குரல் கொடுப்பது அவசியம். 

அதேநேரம் வடக்கில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தலைமையை பொறுப்பேற்க வேண்டும். இதற்காகவே அவரை கடவுள் வடக்கு மாகாணத்துக்கு அனுப்பியுள்ளார். தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று தந்தை செல்வநாயகம் கூறியபோது நாம் எல்லோரும் சிங்களவர்களிடம் இருந்து காப்பாற்றுவதையே தந்தை செல்வநாயகம் சொல்வதாக நினைத்தோம்.

ஆனால் இப்போதுதான் புரிகிறது, தமிழர்களை தமிழ் அரசியல் தலைமையிடம் இருந்து காப்பாற்றுவதையும் உள்ளடக்கியே தந்தை செல்வநாயகம் கூறினார் என்று. எதுவாயினும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல முடியும். 

தாங்கள் வடக்கின் முதலமைச்சராக அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி தங்களுக்கு சிறப்பான முறையில் பாராட்டுவிழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தது. அதன்போது வேலாயுதம் ஒன்று தங்கள் கையில் தரப்பட்டமை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றோம். இந்த வேல் தங்கள்கையில் தரப்பட்டதன் நோக்கம் சூரர்களை அழித்தால் அன்றி, தமிழர்களுக்கு உரிமையும் கிடையாது; நீதியும் கிடையாது என்பதாகும். 

எனவே விக்னேஸ்வரா! கையில் தரப்பட்ட வேலாயுதத்தை எறிந்து சூரரை அடக்கு. அந்த முருகப் பெருமான் சூரனை மடக்கியதுபோல, நீங்களும் தமிழர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய அரசியல் சூரர்களை அடக்க வேண்டும். அதற்கான வியூகத்தை அமையுங்கள். தமிழர்களுக்கு நேர்மையான-விசுவாசமான ஒரு தலைமை உருவாக தாங்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.

-வலம்புரி-