பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பீரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட போது, புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜரே கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறுபட்ட இடங்களில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தக் கடத்தல் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட இராணுவ சார்ஜன்ட் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தாம் எக்னெலிகொடவிடம், “குடும்ப விருட்சம்” என்ற நூல் தொடர்பாகவும், சரத் பொன்சேகாவுடனான தொடர்புகள் குறித்தும் விசாரித்ததையும், அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலவில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சார்ஜன்ட் மேஜர், தாம் பிரகீத் எக்னெலிகொடவை கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த அதிகாரி இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய வந்துள்ளார். தான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், கிரிதல இராணுவ முகாமில் உள்ள மேஜர் தர அதிகாரி ஒருவர், பிரகீத் எக்னெலிகொடவை அழைத்துச் சென்றதாகவும் அந்த சார்ஜன்ட் மேஜர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஒரு இடத்துக்கு போவோம் என்று பிரகீத் எக்னெலிகொடவிடம் கூறி அவரை அந்த இராணுவ மேஜர் அழைத்துச் சென்றதாகவும், அதற்குப் பின்னர் தாம், பிரகீத் எக்னெலிகொட பற்றிய எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கைது செய்யப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், ராஜகிரியவில் வைத்து பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதை, கிரிதல இராணுவமுகாமில் பணியாற்றிய கேணல் தர அதிகாரி ஒருவரும் அறிவார் என்றும் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேஜர் தகவல் வெளியிட்டுள்ளார். அந்த இரண்டு இராணுவ அதிகாரிகளையும் கைது செய்வதற்கான விசாரணைகளில், குற்றப்புலனாய்வுத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டது தொடர்பாக வவுனியாவில் வைத்து கருணா குழுவைச் சேர்ந்த சத்யா மாஸ்டர் மற்றும் நகுலன் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.