மீண்டும் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் – சம்பிக்க கூறுகிறார்
மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினை வாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர்,
‘நாட்டில் மீண்டும் புலிகள் தலைதூக்கி விட்டனர், நாட்டை பிரிக்கப் போகின்றார்கள் என்று, மக்களால் நிராகரிக்கப்பட்ட கொலைகார ஊழல், மோசடி, திருட்டுக் கும்பல் மீண்டும் வழமையான பரப்புரையை ஆரம்பித்துள்ளது.
பொய்ப் பரப்புரைகளை செய்து இந்தக் கூட்டம் மீண்டும் வழமையான அரசியலைச் செய்ய முயற்சிக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள உறுதியான நல்லாட்சியில் ஒற்றையாட்சியை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் பிரிவினைக்கு இடமளிக்கமாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கோ பிரிவினைவாதம் ஏற்படுவதற்கோ நாம் இடமளிக்கமாட்டோம். அதேபோன்று வெளிநாடுகளுக்கும் அடிமைப்படமாட்டோம். சமஷ்டி முறைக்கு இடமில்லை. ஒற்றையாட்சியை பாதுகாக்க பிரதமர் உறுதியளித்துள்ளார். எனவே கொலைகார திருடர்கள் கூட்டத்தின் பொய்ப் பரப்புரைக்கு ஏமாந்துவிட வேண்டாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.