நீங்கியது மர்மம்! கண்டெடுக்கப்பட்ட பாகம் காணமால் போன மலேசிய விமானத்தினுடையது
இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் 239 பயணிகளுடன் காணமல்போன மலேசிய எம்.எச்.370 போயிங் விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்தில், திடீரென அந்த விமானம் மாயமானது. அதனை, கண்டுபிடிக்கும் பணியில், சர்வதேச நாடுகள் ஈடுபட்டன. இருப்பினும், விமானத்தின் எந்த ஒரு பாகமும், கிடைக்கவில்லை.
அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) சில தினங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது.
இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டு. இந்த சிதைவு 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் இருந்தது. விமானத்தின் சிதைவு பாகங்கள் பிரான்ஸ் நகரமான, தொவ்லொசுவில் உள்ள அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் ஆய்வகம் வசம் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் காணமல்போன மலேசிய விமானத்தினுயைது என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.