மஹிந்தவின் கனவை மக்கள் மீண்டும் குப்பைத் தொட்டியில் போடுவார்கள் -ராஜித
எனவே, மஹிந்த ராஜபக்ஷவினது கனவை யும் அவரது சகாக்களது எதிர்பார்ப்புகளையும் எதிர்வரும் 17ஆம் திகதி மக்கள் மீண்டும் குப்பைத் தொட்டியில் போட்டு ஐக்கிய தேசிய முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்வார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் களுத் துறை மாவட்ட வேட்பாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெள்ளைக் கொடி விவகாரம், சர்வதேச விசாரணை போன்ற விவகாரங்களையும் இன வாதத்தையும் கையிலெடுத்துக் கொண்டு மஹிந்த அணியினர் இந்த தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கின்றனர். மக்கள் ஒருபோதும் இவர்களுடைய அடிப்படையற்ற பிரசாரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யில் எஞ்சியிருக்கும் யதார்த்தவாதிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் எம்முடன் இணைந்து நல்லாட்சியில் கைகோர்த்துக் கொள்வார் கள் என்றும் அவர் கூறினார்.
வெள்ளைக்கொடி விவகாரத்தில் இராணுவத்தை காட்டிக்கொடுக்வே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. நாட்டையும் இராணுவத்தையும் காப்பாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சி அக்கறையின்றி செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைகளுக்கு முதலில் யார் இணக்கம் தெரிவித்தார்கள் என்பதையும் தருஸ்மன் அறிக்கை போன்றவற்றையும் சுசில் பிரேம்ஜயந்த இன்று மறந்து விட்டார் போலும், தனக்கு கிடைத்துள்ள பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறு மன சாட்சியில்லாமல் இவர்கள் பேசுகின்றார்கள்.
தேர்தல் காலங்களில் இவ்வாறு பேசுவதால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் மக்கள் இவ்வாறான போலிப் பிரசாரங்களையும் பொய்யான தகவல்களையும் நன்கு அறிவார்கள். ஆகையினாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மக்கள் தூக்கி எறிந்தார்கள்.
இன்று மீண்டும் மக்களை ஏமாற்றி பிரதமராக வருவதற்கு மஹிந்த ராஜபக் ஷ கனவு காண்கிறார். அவரது சகாக்களும் அவரின் நிழலில் தஞ்சம் புகுந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் தகுந்த பாடம் புகட்ட மக்கள் இன்று தயாராகியுள்ளார்கள்.
நாட்டை பாதுகாப்பதில் எமக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. ஆகையினாலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது உயிரையும் பணையம் வைத்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகவும் அவரது அராஜக மற்றும் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒன்றிணைந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அந்த மாற்றத்தை நிலை நிறுத்துவதே இன்று எமது எதிர்பார்ப்பாகும்.
நாட்டை பாதுகாப்பதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அக்கறையில்லை எனறு கூறும் சுசில் பிரேம் ஜயந்த போன்றோர், இன்று மோசடிக் காரர்களையும் ஊழல் பேர்வழிகளையும் பாதுகாப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றார்கள். அவற்றையெல்லாம் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவினுடைய இனவாதப் பேச்சுக்களும் சுசில் பிரேம் ஜயந்த அதே போன்றவர்களது போலிப் பிரசாரங்களும் மக்கள் மத்தியில் இனி எடுபடப் போவதில்லை. எனவே, அவர்களது பக்கத்தில் இருக்கும் சொற்பமான யதார்த்தவாதிகளும் நேர்மையானவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். நாம் நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பதுடன் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் பெரிதும் மதிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.