Breaking News

வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் தீர்ப்பை ஐ.நா. அமுல்படுத்தவேண்டும்: சிவாஜி

சமஷ்டி தீர்வுக்கான கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்காவிடில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை ஐக்கிய நாடுகள் சபை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் தமிழ் மக்களின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநாகல் மாவட்ட சுயேச்சைக்குழு 14 இன் முதன்மை வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

சரணடைந்த 600 போராளிகள் மற்றும் காணாமற்போன 18,000 தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்தல் மற்றும் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட சுயேச்சைக்குழு 14 இன் முதன்மை வேட்பாளருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இத்தேர்தலில் தான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான காரணத்தையும் கோரிக்கை தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

தேர்தல்களில் நான் பலமுறை போட்டியிட்டுள்ளேன். இம்முறை குருநாகலில் போட்டியிடுவது மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகவே ஆகும். ஆனால் இதனை மகிந்த தரப்பினர்கள் இனவாதரீதியாகப் பார்க்கின்றனர். நான் இங்கு பத்துக்கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன்.

அதாவது தமிழ் அரசு உட்பட ஐந்து அரசுகள் கொண்ட இலங்கை ஒன்றியம் கூட்டு இணைப்பாட்சியின் அடிப்படையிலேயே இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும். திருகோணமலை, கண்டி, அநுராதபுரம், காலி, ஸ்ரீஜயவர்தனபுர ஆகியவற்றை அரசுகளின் தலைநகரங்களாகத் தேர்வுசெய்ய முடியும். பாதுகாப்பு வெளிவிவகாரம் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். மத்திய அரசு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொழும்பில் இயங்கும்.

தமிழர் தாயகத்தில் அரசு உதவியுடனான சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி இராணுவ ஆட்சியை மீளப்பெற்று உயர்பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் சுதந்திர சர்வதேச நீதி விசாரணை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்படக்கூடியவாறு இலங்கை அரசு ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் 70,000 ஏக்கர் காணிகள் இலங்கை அரசு படைகளினால் சுவீகாரம் செய்யப்பட்டுள்து. இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளைத் தவிர மிகுதி நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்.இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவேண்டும்.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் சொத்து அழிவுகளுக்கும் போதியளவு நஷ்டஈடு வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம்பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.