ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைப்பு – மைத்திரியின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து. உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறையின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு விலக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறப்பு அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் சிறிய அணியொன்று உள்வட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது முழுப்பாதுகாப்பும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப்படையினர் நியமிக்கப்படவுள்ளதாக, பெயரை வெளியிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது 48 மணிநேரத்தில் நிறைவடையும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இலங்கையின் பிரபல ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூவரே படுகொலை செய்திருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்த நிலையில், இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவையும், அதிபர் பாதுகாப்புப் பிரிவினரே தாக்கியிருந்தனர். இதுபற்றிய காணொளிப் பதிவுகளில் தாக்கியவர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்ட போதும், முன்னைய அரசாங்கம் அதனை மறைத்து விட்டது. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தும் தனது பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டது குறித்து மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்கனவே முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவரான எஸ்.எம்.விக்கிரமசிங்க கூட மாற்றப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அங்குனகொலபெலஸ்ஸவில் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு வளையம் ஊடுருவப்பட்டதையடுத்து, எஸ்.எம். விக்கிரமசிங்க கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதையடுத்து. அவர் நீக்கப்பட்டு, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இன்னொரு பிரதி பொலிஸ் மா அதிபரை நியமித்த போதும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல்கள் நீடித்தன.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், நாமல் ராஜபக்சவுடன் வந்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர், உள்ளக பாதுகாப்பு வட்டத்தைக் கடந்து துப்பாக்கியுடன் உள்நுழைந்திருந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமாக செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
இதையடுத்து, இலங்கை இராணுவத்தில் இருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் 30ஆம் நாள் முற்றாக கலைக்கப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது. இந்தநிலையில், காவல்துறையின் அதிபர் பாதுகாப்பு பிரிவு மிகமுக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, முழுமையாக சிறப்பு அதிரடிப்படை வசம் ஒப்படைக்கப்படுகிறது.