பிரகீத் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் – ஐந்து பேர் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று, இதுபற்றிய விசாரணைகள் மூடிய அறைக்குள் மிக இரகசியமாக இடம்பெறுவதாகவும், விசாரணையாளர்களின் விபரங்கள் வெளியிடப்படாது என்றும், குற்றப்புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதை தாம் அறிந்திருப்பதாக, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். விசாரிக்கப்படும் சந்தேகநபர்களில், தமது கணவரின் நண்பர் ஒருவரும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமற்போன தமது கணவர் தொடர்பான விசாரணையில் திருப்பங்கள் நிகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.