கூட்டமைப்புடன் தேசிய அரசு அமைக்க ரணில் முயற்சியா? திஸ்ஸ கேள்வி
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது கொள்கையிலிருந்து சற்றும் பிசகாது உறுதியாகச் செயற்படும் ஒரு கட்சியாகும். எனவே, அக்கட்சியை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைத்தால் அக்கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதா என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து
உரையாற்றுகையில்,
நடைபெறவுள்ள தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசி்ங்க குறிப்பிடுவதில்லை. மாறாக தேர்தலின் பின்னர் முழுப்பாராளுமன்றையும் இணைத்து தேசிய அரசாங்கம் அமைப்பதாகவே கூறுகிறார். இதிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சியால் நடைபெறவுள்ள தேர்தலில் 113 ஆசனங்களைப் பெறமுடியாது போகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொண்டுதான் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஆட்சி பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்சி முன்வைத்துள்ள சமஷ்டி முறை ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்விலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அக்கட்சி தனது கொள்கையிலிருந்து சற்றும் பிசகாது உறுதியாக செயற் படும். ஆகையினால் அக்கட்சி தேர்தலின் பின்னரும் தங்களின் கொள்கை யினை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவுள்ளது.
ஆகவே இவ்வாறான கொள்கையுள்ளவர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கே ரணில் விக்ரமசிங்க முயல்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைத்தால் அக்கட்சி கோரும் வடகிழக்கு மாகாண இணைப்பு , பாதுகாப்பு வலயம் நீக்கல் , இராணுவ முகாம்களை அகற்றல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யுத்தக் குற்றச் சாட்டு தொடர்பான அறிக்கையை நடைமுறைப்படுத்தல் , புலி சந்தேக நபர்களின் நிபந்தனையற்ற விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வாக்களித்துள்ளாரா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று மோசடிகள் மூலம் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.. இன்று நாட்டில் சட்ட ஆட்சி நிலைகுலைந்துள்ளது. பாதுகாப்புத்துறை சவாலாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆறு மாதங்களுக்கு முன்னர் எவ்வாறன நிலையில் இருந்தது என்பது பற்றி எனக்கு நன்கு தெரியும்.
கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்கூட பாரிய நிதி நெருக்கடியை சந்தித்தது. ஆனால் தற்போது அக்கட்சியைப்போல் பொருளாதார வசதிகொண்ட கட்சி நாட்டில் வேறில்லை. அக்கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் 2.5 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொகைப் பணம் அக்கட்சிக்கு எவ்வாறு கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.