தமிழர்களுக்கு எதிரான தமிழ் அரசியல் தலைமை
பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யாததன் காரணமாக அவர் மீது கூட்டமைப்பு கடும் கோபம் கொண்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தது தொடர்பில் லண்டன் பி.பி.சி தமிழ் சேவைக்கு செவ்வி வழங்கிய இரா.சம்பந்தர், தேர்தல் முடிந்த பின் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றித் தீர்மானிப்போம் என்று கூறியிருந்தார்.
ஆக, வடக்கின் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வீட்டுக்கு அனுப்புவதில் சிலர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை அறிய முடிகிறது.இதேவேளை முதல்வரின் கதிரை மீது ஆசை கொண்டவர்களும் ஆலாய்ப் பறந்து திரிவதாகத் தக வல்கள் வெளிவருகின்றன. எதுவாயினும் வடக் கின் முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தக் கட்சி முற்பட்டாலும் அதற்கு எதிராக வட பகுதித் தமிழ் மக்கள் கிளந்தெழுவர் என்பது நிறுதிட்டமான உண்மை.
வட மாகாண சபைத் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் போட்டியிட்ட தனாலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை அவரால் பெற முடிந்தது. எனவே எச் சந்தர்ப்பத்திலும் வட பகுதி மக்கள் நம்பி அளித்த வாக்குகளுக்கு வடக் கின் முதல்வர் நிச்சயம் மதிப்பளிப்பார் என்பதால்,எந்தக் கொம்பர்கள் வந்தாலும் அவர்களை எதிர் கொண்டு, மக்களிடம் இருக்கக்கூடிய தனது செல்வாக்கை முதல்வர் நிரூபிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பேரவா.இது ஒரு புறம் இருக்க, இன்றைய சூழ்நிலை தமிழ் மக்களுக்கு மிகவும் பாதகமானது என்பது உணரப்படவேண்டும்.
வன்னிப் போரில் நடந்த இன அழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோருவதற்கு தமிழர் தரப்பில் எவருமில்லை. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்து அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் சந்திப்பு நடத்திய போது, சர்வதேச விசாரணை என்ற விடயம் முக்கியத்துவம் பெறாமல் இருந்ததை அவதானிக்க முடிகின் றது. இதில் இருந்து புதிய அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச விசாரணையை ஓரம் கட்டு வதற்கு உடன்பட்டுள்ளமை புலனாகிறது.
ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமை யிலான தேசிய அரசைத் தமிழ் மக்கள் வரவேற்பதன் பின்னணி, முன்னைய அரசில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதாலாகும்.வன்னிப்போரில் தமிழர்களுக்கு நடந்த நிட்டூரத் திற்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி சர்வதேச விசாரணை ஆகும்.
எனவே சர்வதேச விசாரணையை நடத்தாமல் அதனைக் கிடப்பில் போடுவதற்கு யார் முயற்சித்தாலும் அவர்களை தமிழ் அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள். எதுவாயினும் சர்வதேச விசாரணை மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பதன் மறுபக்கம் இலங்கைத் தமிழர்கள் அமெரிக்கா மீது கொண்ட நம்பிக்கையாகும்.
இழப்புகளைச் சந்தித்த ஓர் இனத்தின் நம்பிக் கையை, அந்த இனம் சார்ந்த அரசியல் தலைமை தூக்கி எறிந்தாலும் அமெரிக்கா நிச்சயம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாகும்.
-வலம்புரி-