கன்னி அமர்வில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. விவாதம்
நாளை மறுதினம் கூடவுள்ள 8ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்விலேயே அரசுக்கு எதிராக ஜே.வி.பி. ஒருநாள் விவாதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து அமைத்துக்கொண்டுள்ள தேசிய அரசில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த விவாதத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- 19ஆவது திருத்தச்சட்டத்துக்கமைய அமைச்சரவை 30 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். எனினும், தேசிய அரசு அமைக்கப்படுமாயின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் 46/4 சரத்துக்கமைய அதன் தொகையை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு செப்டெம்பர் முதலாம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இது தொடர்பான யோசனை மனுவொன்றை அரசு முன்வைக்கவுள்ளதுடன், அதனை நிறைவேற்றிக்கொண்ட பின்னரே அமைச்சரவை நியமனங்களை வழங்கவுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டதும் அதற்கு எதிராக ஒருநாள் விவாதமொன்றை மேற்கொள்ள ஜே.வி.பி. தீர்மானித்துள்ளதுடன் குறித்த தினம் அதற்கான அனுமதியை சபாநாயகரிடம் கட்சித் தலைவர் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 8ஆவது நாடாளுமன்றத்தில் முதலாவது விவாதத்தை ஜே.வி.பியே மேற்கொள்ளவுள்ளதுடன் அரசுக்கு எதிரான முதலாவது விவாதமாகவும் இது அமையவுள்ளமை விசேட அம்சமாகும்