ஐ.நா.அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னரே விசாரணை குறித்து கூறமுடியும்! இராணுவ பேச்சாளர்
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. அறிக்கை ஜனாதிபதியின் கரங்களுக்கு கிடைத்த பின்னரே விசாரணைகள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிட முடியாது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித் தார்.
போர்க் குற்றச்சாட்டுக்களில் அடங்கியுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையினை உறுதிபட தெரிவிக்க முடியாது. எனினும் தமது விருப்பத்துக்கு அமைய ஒவ்வொருவரும் கருத்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா.விசாரணை அறிக்கையில் இரண்டு சிவில் உறுப்பினர்கள் உள்ளிட்ட 43 இராணுவ வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்ற நிலையில் இராணுவ வீரர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இராணுவத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என வினவிய போதே இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் எழுந்துள்ளன. ஐ.நா ஆணைக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் விசாரணை அறிக்கையில் இராணுவத்தின் சிலர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய எண்ணிக்கையை கூறுகின்றனர்.
நாற்பது பேர் உள்ளனர் என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர் என்றும் கூறுகின்றனர். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் எந்தளவு உண்மையானது என்பது தெரியவில்லை. இவர்கள் கூறுவதன் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே தெரிவிக்க முடியும்.
எனினும் இந்த விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கப்படும். அதன் பின்னர் அவர் இந்த அறிக்கையினை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதுடன் பாதுகாப்பு பிரிவுக்கும் வழங்குவார். அதன் பின்னரே பாதுகாப்பு தரப்பின் சார்பில் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அதேபோல் வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மைகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக உள்ளடக்கப் பட்டுள்ளது. எனவே அவை தொடர்பில் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வோம். எனினும் இப்போது இந்த அறிக்கை தொடர்பில் எந்தவிதத் தகவல் களையும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்க முடியாது என்றார்.