மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் ஆயரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிடுகையில், மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதங்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடல்நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், சிங்கப்பூரில் 6 வாரங்கள் சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவைப்படுகிறது. இதற்கான உதவியை புலம்பெயர் உறவுகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.