ஜனநாயகப் போராளிகளின் சாட்சியமளிக்கும் அறிவிப்பை வரவேற்கின்றோம்! கூட்டமைப்பு
சர்வதேச நீதிமன்றில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு தயாரென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளமையை வரவேற்கத்தக்கதானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை தொடர்பிலும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு சர்வதேச நீதிமன்றில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தயார் என அறிவித்தமை குறித்தும் கருத்து வெளியிடும்போதே கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறப்படவேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த வகையில் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படுமென பிரதமர் தெரிவித்திருப்பதானது வரவேற்கத்தக்கது.
எனினும் அந்த உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவானது சுயாதீனமானதாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் சந்தர்ப்பத்திலேயே உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்து பக்கச் சார்பற்ற வகையில் பொறுப்புக்கூறப்படும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைக் கொண்ட ஜனநாயக போராளிகள் அமைப்பு சர்வதேச நீதிமன்றத்தில் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுமாகவிருந்தால் அதில் சாட்சியமளிக்கத் தயாரென அறிவித்திருப்பதானது மிகவும் வரவேற்கப்படவேண்டியதாகும்.
யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தாமாக முன்வந்து இவ்வாறான விசாரணையொன்றில் சாட்சியமளிப்பதென்பது அது தொடர்பிலான துல்லியமான உண்மைகளைக் கண்டறி வதற்கு ஏதுவானதாகவிருக்கும். இவ்வாறு யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சாட்சி யமளிப்பதன் ஊடாக உரிய நியாயத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றார்.