Breaking News

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் – ராஜித

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதுபற்றி உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், ”வடக்கில் தான் இறுதிப் போர் நடந்தது. எனவே வட மாகாணசபையையும் இணைத்துக் கொண்டு உள்ளக விசாரணை செய்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

இதேவேளை அனைத்துலகத் தரம் வாய்ந்த- அனைத்துலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய உள்ளக விசாரணையை மேற்கொள்ளுவது தான் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு. இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே ஐ.நா.வின் விசாரணை அறிக்கை வந்ததும் எமது நிலைப்பாட்டை எடுப்போம்.

முதலில் ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவரவேண்டும். அது இரகசிய அறிக்கையாக \ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும். அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டு, அதில் எவற்றை ஏற்றுக்கொள்வது, எவற்றை நிராகரிப்பது என்பது குறித்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்.

அவ்வாறு தீர்மானம் எடுத்த பின்னர் நாம் உள்ளக விசாரணை மேற்கொள்ளும் முறை குறித்து செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது அறிவிப்போம்.

போரின் போது இடம்பெற்ற உயிரிழப்புக்கள் எல்லாம் போர்க்குற்றமல்ல. அவ்வாறு அவற்றை போர்க்குற்றமாக பார்த்தால் போரிடமுடியாது. ஆனால் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கொலை செய்திருந்தால் அல்லது கடத்திக் கொலை செய்திருந்தால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையில் ஆராயப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.