Breaking News

விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன்

நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சி சார்ந்தும் பிரசார செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்திருக்கின்றார்.

அதேவேளை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் என்பதையும் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாமென அவர் எந்தவொரு தருணத்திலும் கூறவில்லை. வடக்கு மாகாண மக்களின் முதலமைச்சராகத் தான் இருப்பதாக கூறியிருக்கிறார். அதனை நாம் மதிக்கிறோம்.

அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது குறித்து நாம் விமர்சிக்க முடியாது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வு குறித்த முன்மொழிவு, திம்புக் கோட்பாடுகளை விட்டு விலகிச் செல்லவில்லை. திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந் துள்ளது. இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.