Breaking News

தோல்விக்கு பயந்து மஹிந்த இனவாதத்தை தூண்டுகின்றார் – ரணில்

தோல்விக்கு அஞ்சும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனவாதத்தை தூண்டி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்பதெனிய மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா பணம் வழங்கியே மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டினார்.

பிரபாகரன் எனக்கும் ஒர் தகவலை அனுப்பி வைத்திருந்தார். மஹிந்தவை விடவும் அதிகளவு பணம் வழங்கினால் எனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என பிரபாகரன் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். கூடுதல் பணத்தை வழங்கி ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டால் வெற்றிக்காக செயற்படத் தயார் என பிரபாகரன் கூறியிருந்தார்.

தோல்வியைக் கண்ட மஹிந்த இன்று இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார்.வடக்கு கிழக்கை துண்டாக பிளவடையச் செய்ய நான் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த கூறுகின்றார். 2005ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மஹிந்த பணம் வழங்க இணங்கியுள்ளார். நீங்கள் அதனை விட பணம் வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையச் செய்ய முடியும் என பிரபாகரன் தகவல் அனுப்பி வைத்திருந்தார்.

பிரதமராக கடமையாற்றிய காலத்தில் நான் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பக்கூட கையொப்பமிட்டதில்லை.மஹிந்தவின் கோரிக்கைக்கு அமைய அப்போதைய பிரதமரின் சார்பில் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோர் பிரபாகரனுடன் பேசினார்கள்.ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டு 200 மில்லியன் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பிரபாகரன் தமி;ழ் மக்கள் 2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பதனை தடுத்தார்.நான் பிரபகாரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட விரும்பவில்லை. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என நான் எனது கொள்கைகளுடன் இருந்தேன்.புலிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது யார் என்பதனை காலையில் எழுந்து கண்ணாடியின் எதிரில் சென்று பார்த்தால் குற்றம் சுமத்துவோருக்கு தெரியும் யார் குற்றவாளிகள் என்பது.

மஹிந்த ராஜபக்ச ராடா நிறுவனத்தின் ஊடாக 2000 மில்லியன் புலிகளுக்கு வழங்கினார்.மாவிலாறு போர் ஆரம்பித்த போதிலும் பணம் வழங்கப்பட்டது.2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோத்தபாய ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

ராஜபக்ச குடும்பம் மீது கைவைக்க மாட்டார்கள் எனக் கருதியே பிரபாகரனுக்கு பணம் வழங்கப்பட்டது.மாவிலாறில் மக்கள் இறக்கும் போது மஹிந்த தரப்பிற்கு அது பிரச்சினையாக தென்படவில்லை.மாவிலாற்றில் போர் ஏற்படும் என அவர்கள் கருதவில்லை.சம்பிக்க, ரதன தேரர் போன்றவர்கள் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாகவே போர் ஆரம்பிக்கப்பட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.