Breaking News

மகிந்த மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகையாம்- சுசில் பிரேமஜெயந்த கூறுகிறார்

மகிந்த ராஜபக்ச மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகை இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் சுசில் பிரேமஜெயந்த.

கொழும்பில் ஹில்டன் விடுதியில் நேற்று மகிந்த ராஜபக்ச தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் ஊடக ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் பெயரையும் நாட்டையும் மகிந்த ராஜபக்ச நாசப்படுத்தி விட்டதாக, சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மகிந்த ராஜபக்ச, என்னை அவர் விமர்சிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல என்று மட்டும் கூறிவிட்டு அமைதியானார். அதையடுத்து, கருத்து வெளியிட்ட சுசில் பிரேமஜெயந்த, 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுச்செயலர் என்ற வகையில், நான் ஒன்றைக் கூற வேண்டும்.

2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அப்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா ஆதரவு அளிக்கவில்லை. அப்போது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருந்தார்.

எனினும், நாங்கள் மகிந்த ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத்தினோம். எனினும், மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சதமேனும் செலவிடவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் டார்லி வீதியில் இருந்த போதிலும், அதற்கு அருகில் எமது பரப்புரை செயலகத்தை அமைத்திருந்தோம்.” என்று குறிப்பிட்டார்.

அப்போது, மகிந்த ராஜபக்ச குறுக்கிட்டு, சந்திரிகா எமது பக்கம் இருக்கிறாரா, அல்லது எம்மை எதிர்க்கிறாரா என்பது பிரச்சினையல்ல. அது எமது வெற்றியின் மீது செல்வாக்குச் செலுத்தாது என்று குறிப்பிட்டார். இதையடுத்து சுசில் பிரேம ஜெயந்த, அவர் எதற்கான மகிந்த ராஜபக்சவை வெறுக்கிறார் என்று தெரியவில்லை. அவரது முற்பிறவியில் இருந்து வந்த பகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.