உள்ளகப் பொறிமுறையில் வடமாகாண சபையின் பங்குபற்றுதல் கட்டாயம் : ஐ.நா அறிவிப்பு
யுத்தத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் பொறிமுறையை உருவாக்குதவதற்கான பேச்சுவார்த்தையில் வடமாகாண சபையின் பங்குபற்றுதல் கட்டாயம் இருக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் வடமாகாண சபையை உள்ளடக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜு.எல் பீரிஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை விடயத்தில் சரியான மாதிரி ஒன்றை உருவாக்கும் விடயத்தில் வடமாகாணசபை உள்ளிட்ட தேசிய அளவில் உண்மையானதும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதுமான கலந்தலோசனைகள் அவசியம் என ஐ.நா நம்புவதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அதன் பொறுப்புக்கூறல் தொடர்பில் தாம் முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக நியூயோர்க்கில் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை மேம்படுத்துல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அனைத்து முக்கிய பங்காளர்களுடனான கலந்தாலோசனைகளில் பரந்தளவான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை ஐக்கிய நாடுகள் சபை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா எவ்வாறான ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடனும் ஏனைய முக்கிய தரப்பினருடனும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் நம்பகமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளின் உருவாக்கத்திற்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்த பொறிமுறைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பங்குபற்றுதல் , மற்றும் ஆலோசனை செயன்முறைகளை கொண்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.