டிலான் பெரேராவிற்கு தேர்தலின் பின்னர் விஷப் போத்தல்கள் தேவைப்படும்! ஐதேக கூறுகிறது
வெறுமனே மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு போலியான பிரசாரங்களை முன்னெடுத்துவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் எம்மை அருந்துமாறு தெரிவித்திருந்த விஷப்போத்தல்களை கவனமாக தம்முடன் வைத்துகொள்வதன் மூலம் எதிர்வரும் பொது தேர்தலுக்கு பின்னர் தோல்வியின் காரணமாக அதனை பயன்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அத்தோடு குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பிடித்துள்ள முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு விஷபோத்தல்கள் கட்டாயமாக தேவைப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.
கடந்த ஜனவரி எட்டாம் திகதி நல்லாட்சிக்கு வித்திட்டு குறுகிய காலத்தில் மூவின மக்களுக்கும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்த எமது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரசாரங்களை பாதாள கோஷ்டிகளை ஈடுபடுத்தி மேற்கொள்வதற்கான எந்தவொரு தேவையும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இல்லை எனவும் தெரிவித்தது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் குறிப்பிடுவது போல் நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு ஊழல் மோசடிகளும் இடம் பெறவில்லை அவ்வாறான ஊழல் மோசடிகளை எமது கட்சி எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அனுமதிக்காது வெறுமனே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தரப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு போலியான பிர சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவித்து விஷபோத்தல்களை அருந்துமாறு தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் தோல்வியை சந்திக்க இருப்பதனால் குறித்த விஷபோத்தல்களை பாதுகாத்து வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
குறிப்பாக தேசியப்பட்டியல் மூலம் கட்சியில் இடம் பிடித்துள்ள முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு குறித்த விஷபோத்தல் கட்டாயமாக தேவைப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வித்திட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசானது 6 மாத காலத்தில் மூவின மக்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்ளை முன்னெடுத்து மக்களுக்கான பல்வேறு சலுகைகளை வழங்கியதன் மூலம் மக்களின் வாழ்க்கை சுமையை குறைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் எமது கட்சியின் பிரசார பணிகளை எந்த ஒரு பாதாள உலக கோஷ்டிகளையும் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இல்லை. அவ்வாறான தேவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே உள்ளது. அந்தக் கட்சியின் உறுப்பினர்களே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
குறுகிய காலத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்க்கை சுமையை குறைத்த எமக்கே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் இதை தவிர மக்களுக்கான மாற்று வழிகள் இல்லை.
இன்று கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் எமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் திறன்களிலும் அவர்களின் அறிவாற்றல், கல்வி தகைமை மக்களின் ஆதரவு உள்ளிட்ட விடயங்களில் ஒப்பிடும் வகையில் கூட்டமைப்பை சேர்ந்த எந்த உறுப்பினரும் எமக்கு ஒப்பானவர்கள் இல்லை. கடந்த ஜனவரி 08 ஆம் திகதிக்கு பின்னர் மக்களுக்கு நாட்டினது பொருளாதாரம் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவு தன்மை ஒன்று ஏற்பட்டுள்ளது இதனை நாம் மிகவும் வரவேற்கின்றோம் அந்த வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பானது எமக்கு பாரிய வெற்றியை தேடித்தந்தது அந்தவகையில் இம்முறையும் அதனை மக்கள் எமக்கு பெற்றுதருவார்கள். கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியும் தற்போதைய வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளான 2500 ரூபாவை பெற்று கொடுப்பதற்கு 06 வருடங்கள் தேவையாக இருந்தது. மறுபுறம் நல்லாட்சி அரசான எமக்கு குறுகிய 06 மாத காலப்பகுதியில் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகளாக 10000 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடிந்தது என்றார்.