பதவி விலக மறுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – மகிந்த தரப்பின் முயற்சிக்கு எதிர்ப்பு
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகச் செய்யும், மகிந்த தரப்பின் முயற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகவுள்ளதாகவும், அதற்கு ஜனபதிபதியின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார்.
ஆனால், தாம் அவ்வாறு பதவி விலகும் முடிவை எடுக்கவோ, பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவோ இல்லை என்றும், திலங்க சுமதிபால பொய் சொல்வதாகவும் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும் துமிந்த திசநாயக்கவும் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் மத்திய குழுவோ எமது பதவி விலகல் குறித்து தீர்மானிக்க வேண்டும். அதுவரை நான் பதவி விலகப் போவதில்லை என்று மகழந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். துமிந்த திசநாயக்கவும், தாம் பதவி விலகப் போவதில்லை என்ற உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் மத்திய குழுவே, அரசாங்கத்தில் இணைவது குறித்து முடிவு செய்தது என்றும் அதுபோலவே விலகுவது குறித்தும், முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற காரணங்களுக்காக பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தாம் அவ்வாறு பதவி விலகப் போவதில்லை என்றும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மத்திய குழுவின் தீர்மானப்படியே அமைச்சர் பதவியில் இருப்பதாகவும், மத்திய குழு விலகுமாறு முடிவெடுக்காமல் தாம் அமைச்சர் பதவியை கைவிடப் போவதில்லை என்றும் மகிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார்.