Breaking News

தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.


நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதிமன்றத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தாஜுதீனின் எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவான ஆய்வொன்று அவசியம் எனவும் அதனால் சடலத்தை கண்டிப்பாக தோண்டி எடுத்தே ஆக வேண்டும் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தனர். 

இதனையடுத்து தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதா இல்லையா என்பதை இன்று அறிவிப்பதாக நீதவான் நேற்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், வஸீம் தாஜுதீனின் சடலத்தை எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது கடந்த 2012ம் ஆண்டு மே 16ம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் இருந்த கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.