Breaking News

வடகிழக்குத் தமிழ் பிரதேசங்களில் மந்த கதியிலேயே பிரசாரப்பணிகள்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் இலங்கையின் பல பாகங்களிலும் சூடுபிடித்துள்ள நிலையில் வடகிழக்கு பிரதேசத்தில் தமிழ் பிரதேசங்களில் மந்த கதியிலேயே பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் செயற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்றுவருகின்றன.

தமிழ் கட்சிகளில் தேர்தலில் இறங்கியுள்ளவர்கள் தனிப்பட்ட ரீதியில் மட்டுமே வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது.குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட வாக்கு சேகரிப்பினை மட்டுமே மேற்கொண்டுவருவதுடன் அவர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுவருகின்றன.குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுக்கும் ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கும் இடையிலேயே இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

எனினும் சிலர் தமக்கு வாக்களிக்காவிட்டாலும் வீட்டுக்கு மட்டும் வாக்களிக்குமாறும் கோரிவரும் நிலையும் இருக்கின்றது.தமிழ் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளவர்கள் வாக்குச்சேகரிப்பில் ஒன்றிணைந்து பிரசாரங்களை மேற்கொள்வதை காணமுடிகின்றது.ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களும் தனிப்பட்ட ரீதியில் வாக்குச்சேகரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிரசாரங்கள் மிகவும் மந்த கதியில் செல்வதுடன் தமிழ் மக்கள் தேர்தல் தொடர்பில் அக்கரையற்ற நிலையிலேயே காணமுடிகின்றது. ஆனால் முஸ்லிம் பிரதேசங்களில் தனியாகவும் கூட்டாகவும் வேட்பாளர்கள் தமது பிரசாரங்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களின் பிரதான நகரங்களில் தினமும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதனால் குறித்த பிரதேசங்கள் களைகட்டியுள்ளன.இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பிரதேசங்களின் நிலைமைகள் உள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.