வடக்கில் புலிமுகம் தெற்கில் சிங்கமுகம் - சுசில் பிரேம்ஜயந்த குற்றச்சாட்டு
வடக்கில் பிரிவினைவாத பிரசாரங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதைப்போல் தெற்கில் ஒன்றிணைந்த நாடு எனும் கட்டுக்கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றும் வேலையினை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.
வடக்கில் புலி முகத்தையும் தெற்கில் சிங்கமுகத்தையும் இவர்கள் காட்டுகின்றனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிணைந்த நாட்டுக்குள் உச்சகட்ட அதிகாரப்பகிர்வை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அப்படி இவர்கள் கூறுவது உண்மையாயின் மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போகின்றனரா என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்க வேண்டும் எனவும் அம்முன்னணி கேள்வி எழுப்பியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அக்கட்சியின் தலைவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் ஏனைய கட்சிகளை விடவும் தாமதித்த நிலையில் ஆரம்பித்திருந்தாலும் இப்போது நாம் நல்ல நிலையில் எமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அனுராதபுரத்தில் ஆரம்பித்த எமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இப்போது மக்களின் ஆதரவுடன் மிகவும் பலமாக கொண்டுசெல்லப்பட்டு வருகின்றது.
ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் எம்மீது பொய்பிரச்சாரங்களை முன்வைத்து மக்களை எமக்கெதிராக திருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மக்கள் இனிமேலும் இவர்களது பொய்களை கண்டு ஏமாறப்போவதில்லை என்பதை நாம் இவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குறுதிகளும், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனமும் முற்றிலும் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமாகும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்கு கொண்டுசெல்லவே ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிக்கின்றனர். சர்வதேச கொள்கைகளையும், சர்வதேச பணத்தையும் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
மேலும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலைத்திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளும் நாட்டில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டில் சமஷ்டி முறையில் தீர்வு எட்டப்படாவிடின் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
புலிகளைப் போசிக்கும் விஜயகலா
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் புலிகளை போசிக்கும் வகையில் நடாத்திவருகின்றார். வடக்கில் புலிகளை பலப்படுத்தும் வகையில் தனது பிரச்சார நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
அதேபோல் இன்று வடக்கின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக வீழ்ச்சிகண்டுள்ளதாக யாழ். நாகவிகரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
ஆகவே இன்று நாடு எந்த திசையில் பயணிக்கின்றது என்பது நன்கு தெரிகின்றது. பிரிவினைக்கான அடித்தளத்தை பிரிக்கும் வேலைத்திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் பிரிவினை பிரச்சாரங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதுடன், தெற்கில் இனவாதக் கதைளையும், ஒன்றிணைந்த நாடு எனும் கட்டுக்கதைகளையும் கூறி சிங்கள மக்களை ஏமாற்றுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி வடக்கில் புலி முகத்தையும் தெற்கில் சிங்க முகத்தையும் காட்டுகின்றது என்றார்.
அனுர பிரியதர்ஷன யாப்பா
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கையில்,
அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது. ஆனால் ஒன்றிணைந்த நாட்டுக்குள் உச்சகட்ட அதிகாரப் பகிர்வு என இவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் சமஷ்டி முறைமை வரும்வரையில் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப் போவதில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த நாட்டுக்குள் உச்சகட்ட அதிகாரப்பகிர்வை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அப்படி கொடுப்பதாயின் சமஷ்டி ஆட்சியை உருவாக்க வேண்டும். அப்படி இவர்கள் கூறுவது உண்மையாயின் மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போகின்றனரா என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்க வேண்டும். நாட்டை பிரிக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் இந்த நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான வகையிலேயே முன்னெடுக்கின்றனர். அரச உடைமைகளை முழுமையாக பயன்படுத்தி தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு நாட்டில் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் மோசமானதாக மாறி வருகின்றது.
மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றும் இவர்கள் நல்லாட்சி என்ற பொய்க்கதைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொடர்ந்தும் உண்மைகளை மறைத்து ஏமாற்றுக் கதைகளை கூறி மக்களை முட்டாளாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.