Breaking News

சுமந்திரனின் கருத்தை நிராகரிக்கின்றார் சுரேஸ்! கூட்டமைப்பிற்குள் குழப்பம்

இறுதிக் கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த உள்ளகப் பொறி முறைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

உள்ளக விசாரணைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதாக யாரும் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பொருத்தமானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணையை உள்ளகப் பொறிமுறைக்குள் கொண்டு உள்ளக விசாரணையாக மாற்ற இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அதுவல்ல. போரில் ஈடுபட்டவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிய சுரேஸ் பிரேமசந்திரன், இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்று ஏற்படுகின்ற போதுதான், அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.

சர்வதேச விசாரணையை விட உள்ளக விசாரணையே சிறந்தது என்றும் அந்த உள்ளக விசாரணை சர்வதேச தரத்தில் நடைபெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர், சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார்.  இந்தநிலையில், உள்ளக விசாரணையை ஏற்க முடியாது என சுரேஸ் பிரேமசந்திரன் இன்று கூறியமை குறிப்பிடத்தக்கது.