தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் கூட்டுக்கட்சிகள் பதிவு செய்ய தீர்மானம்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கூட்டுக் கட்சிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக பதிவு செய்வதற்கு தீர்மானித்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
இம் முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் தமிழரசுக்கட்சியை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை காரணமாக வைத்தே இச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருவதுடன் இப் பதிவிற்கு முன்னதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் குழு உட்பட தமிழ் தேசியத்தில் பற்றுறுதியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவாக பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்க தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தித்த போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் நேரடியாக அமெரிக்க தூதரகத்தில் இருந்தே இவ் அழைப்பு வந்ததாகவும் தெரிவிக்கப்படுவதுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அதிகளவான விரிசலை ஏற்படுத்தியுள்ளது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.