புலிகளுக்கு நிதி வழங்கவில்லையா? மஹிந்தவினால் நிரூபிக்க முடியுமா ? சம்பிக்க ரணவக்க சவால்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டிருப்பதைப்போன்று நாட்டின் தேசிய பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டுள்ளது.
புலிக்கதைகளைக் கூறி நாட்டின் ஒற்றுமையை சிதைக்கவே மஹிந்த முயற்சிக்கின்றார் என ஐக்கிய தேசிய முன்னணியின் வேட் பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மஹிந்தவே விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை பலப் படுத்தினார். இல்லையென நிரூபிக்க முடியுமானால் மஹிந்த என்னுடன் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் செய்தியாளர்சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மஹிந்த ராஜபக் ஷவும் அவரது கூட்டணியினரும் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். புலிகள் நாட்டில் மீண்டும் தலை தூக்குவதாகவும், நாடு பாரிய விளைவுகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இவை அனைத்தும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளாகும். அத்துடன் சிங்கள மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். இலங்கையில் விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்தை முழுமையாக அழித்துவிட்டோம். ஆனால் அவர்களை எமது நாட்டில் கட்டுப்படுத்தியுள்ளோமே தவிர சர்வதேச அளவில் அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அது எமக்கும் நன்றாகவே தெரியும். ஆயினும் நாம் ஒருபோதும் நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல அனுமத்திக்க மாட்டோம். அதேபோல் எமது பாதுகாப்பு படையினரும் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றனர். ஆகவே இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட மாட்டோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு குறித்து தெரிவித்ததைபோன்றே இம்முறை பிரதமர் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த இரண்டு விஞ்ஞாபனங்களிலும் ஒரே காரணங்களே முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் புலிகள் நாட்டில் தலைதூக்குவதாக குறிப்பிடும் மஹிந்த ராஜபக் ஷவே புலிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். கடந்த 2006ஆண்டு புலிகளுக்கு பணம் கொடுத்தார். சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மஹிந்தவின் நெருங்கிய அரசியல் நண்பர்கள் இருவரினூடாக விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.
நான் முன்வைக்கும் இந்த விடயம் பொய்யெனின் மஹிந்த என்னுடன் நேரடி விவாதத்துக்கு வந்து நான் கூறியவை பொய்யென நிருபிக்க வேண்டும். இது நான் அவருக்கு விடுக்கும் நேரடி சவாலாகும். புலிகளுக்கு பணம் கொடுத்தாரா இல்லையா என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை யார் வைத்திருந்தனர் என்பது எமக்கும் தெரியும். அவை அனைத்தையும் நிருபிக்ககூடிய வகையில் தகவல்கள் எம்மிடம் உள்ளன. எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் சட்டரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நாம் இந்த குற்றங்கள் தொடர்பில் காரணங்களை வெளிப்படுத்த முன்வருவோம்.
அதேபோல் பாதாள உலகக் கோஷ்டிகளின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் பாதாள கோஷ்டியை தவிர வேறு எந்த பாதாள கோஷ்டியும் தலைதூக்க அனுமதிக்கவில்லை. ஆனால் மஹிந்தவின் பாதாள கோஷ்டிகள் நாட்டில் அனைத்து மோசடிக்கார வேலைகளையும் செய்துவந்தன .
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம் பலப்பட்டிருப்பதைப்போல் நாட்டின் தேசிய பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. ஆயினும் ஒருசில சம்பவங்கள் கடந்த சில தினங்களில் நடந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் திட்டமிட்டு நல்லாட்சியை வீழ்த்தும் செயற்பாடுகளாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த சம்பவங்களின் பின்னணியில் யார் செயற்பட்டு வருகின்றனர் என்ற உண்மையை விரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.