நாட்டையும் மீட்பதற்காகவே ரணிலுடன் இணைந்துள்ளேன் - சந்திரிகா
அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து சுதந்திரக் கட்சியை கொள்ளையரின் கூடாரமாக மாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெட்கமின்றி அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டையும், கட்சியையும் மீட்பதற்காகவே ரணிலுடன் கைகோர்த்ததாகக் கூறியுள்ளார்.
தனது தந்தையால் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியிலிருந்து உயிருள்ள வரை பிரியப்போவதில்லை எனவும் கட்சியை மீட்டுக்கொடுப்பதற்காகவே மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்தனகல தொகுதி நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாதுளுவாவே சோபித்த தேரோ உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கூறியதாவது:
“இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதி நாம் நாட்டு மக்களிடன் இணைந்து மெளனப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டோம். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மோசடிக் கும்பலிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து நல்லாட்சியை பிரகடனப்படுத்திக்கொண்டோம்.
இந்த மெளனப்புரட்சியில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்தனர்.
மக்களால் தூக்கி வீசப்பட்ட மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றார். அந்த மோசடிக்காரர்களை இன்னொரு தடவை பாராளுமன்றம் வர இடமளிக்கமாட்டோம். இவர்களின் ஊழல், மோசடிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் மீது உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதனையும் சட்ட ரீதியாகவே செய்வோம். பயங்கரவாதத்திலிருந்து நாட்டை உண்மையாக மீட்டவர், இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவாகும்.
அதனை தனது சாதனையாகக் காட்டி மாலை சூடிக்கொண்ட மஹிந்த, நாட்டை மீட்ட அந்தத் தளபதியை எவ்வாறு நடத்தினார் என்பதை நாடே அறியும். அவ்வாறான மிலேச்சத்தனமாக நாம் நடந்து கொள்ளமாட்டோம். தேர்தல் முடிந்த பின்னர் சட்டம், ஒழுங்கைப் பேணி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டோம்.
இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வர முயற்சிப்பதற்கு வெட்கப்பட வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன சிறிதளவும் கிடையாது.
எமது கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் பெற்றோலிய வள அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் பல மில்லியன் ரூபாக்களை கப்பமாக அல்லது கமிஷனாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
உலகச் சந்தையின் விலைக்கு மேலதிகமாக 3 மடங்காக கணக்குக் கட்டியே இந்த கமிஷனைப் பெற்றுள்ளனர். அது தொடர்பான முழுமையான விபரங்கள் ஆவணங்களை பெற்றுள்ளோம். விரைவில் அது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும். அதனை மீட்டெடுப்பதற்கான வழிகளையே தற்போது முன்னெடுத்து வருகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி நேர்மையான தலைவர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்சியாகும்.
எமது கட்சியை மீட்டெடுக்க அவர்களது உதவியை நாடியுள்ளோம். அதன் பொருட்டே இணைந்து செயற்படுகின்றோம். ஜனவரி 8 இல் மீட்டெடுத்த நாட்டை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பலமுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். அதன் பொருட்டே கொள்ளையர் கூட்டத்தை விரட்டியடிக்க ஒன்றுபட்டுள்ளோம். எதிர்வரும் 17ம் திகதி நாட்டு மக்கள் சிந்தித்துச் செயற்பட முன்வர வேண்டும்.
இன்று நாம் கட்சி, நிறம், சின்னம் எனப் பார்க்க முடியாது. முதலில் நாட்டைக் காப்பாற்றுவோம். அதன் பின் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.குடும்பத்தில் சிலர் வீட்டைப் பறிக்க முயற்சிக்கும் போது, அடுத்த வீட்டாரின் உதவியுடன் வீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைப் போன்றே நாம் இப்போது நமது கட்சியை பாதுகாப்பாக மீட்டெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்கின்றோம். அவ்வாறின்றி நாம் ஐ.தே.கவுடன் சங்கமமானதாக எண்ண வேண்டியதில்லை எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.