இரண்டு வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ
தமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் வியாபாரப்பண்டமாக காணப்பட்டதாகவும், இதனால் பெரும்பான்மை கட்சிகளே பயனடைந்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பயனுள்ளதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போது தமது உரிமைகளை மீள பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கொழும்புவாழ் தமிழர்களுக்குக் கிட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், தமது கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டு வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக செயற்படுவதாகவும், அதனை அரசாங்கம் மறுக்கும் பட்சத்தில் அகிம்சை போராட்டத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.