நாம் கோரும் சமஷ்டி முறைக்கு எமது மக்களின் அங்கீகாரம் தேவை: சம்பந்தன் வேண்டுகோள்
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாம் சமஷ்டி முறையை முன்வைத்துள்ளோம். இதற்கு எமது மக்கள் இந்தத் தேர்தலில் முழுமையாக அங்கீகாரமளித்து உலகிற்கு எமது அபிலாஷைகயை வெளிப்படுத்தவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம். சம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைத்தன.
ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு, எமது தேசியப் பயணத்திற்கான தீர்வுவெளிவரும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூறமுடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளுக்கு ஒத்ததாக பார்க்கப்படுகின்றது. அதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை. இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வருகின்ற தேர்தல் மூலம் எமது மக்கள் நிரூபிக்க வேண்டும். இதனை எமது மக்கள் உணர்ந்துசெயற்பட வேண்டும். செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
எமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை. எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் இதுதான் எமது நிலைப்பாடு. சர்வதேசத்தின் நிலைப்பாடும் இதுதான். விசுவாசமான நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்படவேண்டும். இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வுகிடைக்க வேண்டும்.
இதற்கு அமைய இருக்கின்ற புதிய பாராளுமன்றத்தினூடாக இதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ்விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது அரசியல் கலை, கலாசார, பொருளாதார, அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.