இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கிறார் அதுல் கெசாப்
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் கெசாப் (வயது 44) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவினால், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்ட, அதுல் கெசாப்பின் நியமனம், அமெரிக்க செனட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து. கடந்த ஜுன் 23 ஆம் நாள் அவர் அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழு முன்பாக இலங்கை தொடர்பான கொள்கைகள் குறித்து உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க செனட் கெசாப்பின் நியமனத்தை உறுதி செய்துள்ளது.
இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கவுள்ள அதுல் கெசாப், இதுவரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
1994இல் அமெரிக்க வெளிவிவகாரச் சேவையில் இணைந்த இவர், 2005 தொடக்கம் 2008 வரை புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி கவுன்சிலராக பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெற்காசியப் பிராந்தியத்தில், ஏற்கனவே இந்தியாவின் பங்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட, ரிச்சர்ட் ராகுல் வர்மா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றும் நிலையில் அதே மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அதுல் கெசாப் சிறிலங்காவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுல் கெசாப்பின் தாயார் சோ கல்வேர்ட்டும், அமெரிக்க வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றியவர். அவர் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் பணியாற்றியிருந்தார். கெசாப்பின் தாயார், லண்டனில் பணியாற்றிய போது, இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கெசாப்பின் தந்தையான சந்தர் சென்னை சந்தித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.
ஐ.நாவின் அபிவிருத்தி பொருளியலாளராக நைஜீரியாவில் சந்தர் சென் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான், 1971இல் அதுல் கெசாப் அங்கு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.