வடமாகாண சபைக்கு மூன்று உறுப்பினர்கள் இன்று பதவியேற்பர்!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர்கள் வெற்றிடத்துக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கரணவாய் தெற்கைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், துணுக்காய்ப் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அங்கஜன் இராமநாதனின் இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்ரீ ரங்கேஸ்வரன் வடக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில் புதிய வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு பதவியேற்கவுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ .கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.