புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை 45!
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக பிரதான கட்சிகளின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேலதிகமாக பிரதி அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் 45 வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகளும் விகிதாசார முறையில் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி 55 வீதமான அமைச்சுப் பதவிகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 45 வீதமான அமைச்சுப் பதவிகளையும் பகிர்ந்து கொள்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
எவ்வாறெனினும், இதுவரையில் அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.