சனல்- 4வின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது இலங்கை
சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், முன்னைய அராங்கத்தின் பணிப்பின் பேரில், சனல் -4 காணொளி தொடர்பாக 2013ஆம் ஆண்டு தொடக்கம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளவர்கள் இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரா என்பதை உறுதி செய்யும் விசாரணைகளே இடம்பெறுவதாகவும் இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.எனினும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையிலும், அமெரிக்கா தரப்பில் உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலுமே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையா என்று விசாரிப்பதற்காக தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் ஒரு இராணுவ விசாரணைக் குழு 2013ஆம் ஆண்டு ஜனவரியில் அமைக்கப்பட்டதுஇந்த விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கையில், இறுதிக்கட்டப் போரின் போது, எந்த போர்க்குற்றங்களிலும், சிறிலங்கா இராணுவம் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
அதேவேளை, சனல்-4 காணொளி தொடர்பாக இரண்டாவது கட்ட விசாரணை நடப்பதாகவும் அதன் அறிக்கை விரைவில் கையளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் பின்னர் அதுபற்றிய எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இராணுவ நீதிமன்றத்தின் தலைவராக இருந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஷ்யாவுக்கான பிரதித் தூதுவராகவும் அனுப்பப்பட்டார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து, இராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்ட பின்னரும் சனல்-4 காணொளி பற்றிய விசாரணைகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அதுபற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில், தான் இலங்கை இராணுவம் இப்போது இந்தக் காணொளி பற்றிய விசாரணைகள் நடப்பதாக அறிவித்துள்ளது.
நம்பகமான உள்நாட்டு விசாரணை பற்றிய சந்தேகங்கள் நிலவுகின்ற நிலையில், அந்த சந்தேகங்களைப் போக்கும் வகையில், இந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை, இந்த விசாரணை அறிக்கை உறுதிப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, முன்னதாக, சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் காட்சிகள் போலியானவை என்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்டது என்றும் சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.