பிரகீத் கடத்தல் விவகாரம்! 4 இராணுவ அதிகாரிகளை விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி அளித்துள்ளது.
பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட கிரித்தல இராணுவ முகாமில் பணியாற்றிய, லெப்.கேணல் குமார ரத்நாயக்க, லெப்.கேணல் சிறிவர்த்தன, ஸ்ராவ் சார்ஜன்ட் ராஜபக்ச, கோப்ரல் ஜெயலத் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரவினரால் கைது செயய்யப்பட்டனர்.
இவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டது. எனினும், அதற்கு அனுமதி அளிப்பதற்கு இழுத்தடித்து வந்த, பாதுகாப்பு அமைச்சு நேற்று மாலையே அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இந்த இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கு பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.