சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க 400 ஆண்டுகள் செல்லும் – அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெற்ற கடனை இலங்கை அடைப்பதற்கு 400 ஆண்டுகள் செல்லும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கையின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதலாவது கட்டத் திட்டத்துக்கு 361 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. இதில் 80 வீதம் சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து கடனாக பெறப்பட்டது.இந்த துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் போதிய வருமானத்தைப் பெற்றுக் கொடுக்காத நிலையில் இது ஒரு வெள்ளை யானை என்று விமர்சிக்கப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப்படும் துறைமுகத்தின் இரண்டாவது கட்டத்துக்கு 1 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்று துறைமுக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, தற்போது திருப்பிச் செலுத்தும் அளவில், சீனாவிடம் பெறப்பட்ட கடனை அடைப்பதானால், 400 ஆண்டுகள் செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.