மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்க மகிந்த தயார்!
''ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள நான் தயார்''
என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அல்லது நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிட தயாராகி வருவதாக மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்குத் தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று (09) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச இதனக் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் ஆலோசகர்களின் ஒத்துழைப்புடன் இந்த விசேட அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. நிலைமை இவ்வாறிருக்க தற்போது ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து வரும் பிரபல அரசியல்வாதியொருவர் மீண்டும் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரகசியத் திட்டத்திற்கமைய முன்னாள் ஜனாதிபதியையும் இணைத்துக் கொண்டு ''மைத்திரியுடன் முன்நோக்கி'' என்ற தேர்தல் பரப்புரையை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.