சாந்தி சச்சிதானந்தம் காலமானார்
அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்ப காலங்களில் பணியாற்றியிருந்தார்.
விழுதுகள் மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரான சாந்தி சச்சிதானந்தம் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பல நெருக்குதல்களை சந்தித்ததோடு அவரது அலுவலகம் உடைக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாகியிருந்தது.யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியாக விளங்கிய போதிலும், அந்தத் துறையில் ஈடுபடாது, சமூகப் பணிகளிலேயே கூடுதலாக ஈடுபட்டுவந்தார்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், பாண்டித்தியம் பெற்ற அவர், இரண்டு மொழிகளிலும் ஆக்கங்களை எழுதியிருந்தார்.மட்டக்களப்பிலுள்ள மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய அவர், கிழக்கு மாகாணத்தில் பல சமூக அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டார்.விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட இவர், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து பல ஆக்கங்களையும் எழுதியிருந்தார். இவரது கணவர் மனோராஜசிங்கம் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியில் செயற்பாட்டாளராக விளங்கிய காலங்களில் அவரது அரசியல் பணிகளோடு இணைந்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்திலும் தனது பத்தி எழுத்துக்களை பிரசுரிக்க அனுப்பி இருந்த சாந்தி, GTBC.FM வானொலியில் நேரடி கலந்துரையாடல்கள் பலவற்றிலும் கலந்துகொண்டிருந்தார்.1958ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளார். இவரது கணவர் மனோ ராஜசிங்கம் 2009ஆம் ஆண்டு காலமானமையும் குறிப்பிடத்தக்கது.