35 பேர் கொண்ட அமைச்சரவை – ஐதேகவுக்கு 19, சுதந்திரக்கட்சிக்கு 16
இலங்கையில் புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைகக்கவுள்ள தேசிய அரசாங்கத்தில், 35 அமைச்சர்களே அங்கம் வகிப்பர் என்றும், இதில், 19 அமைச்சர் பதவிகள் ஐதேகவுக்கும், 16 அமைச்சர் பதவிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுக்கு, தேசியப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
அவர்களில், மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திசநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஐதேக, ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு, தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வழங்கவுள்ளது. எனினும், ஐதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 19 அமைச்சர் பதவிகளில், நான்கு புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க,வஜிர அபேவர்த்தன, ஹரீன் பெர்னான்டோ ஆகியோருக்கே அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன. அதேவேளை, ஐதேகவின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள கரு ஜெயசூரிய, அடுத்த சபாநாயகராக தெரிவு செய்யப்படவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன