Breaking News

தேசியப் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை

தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லையென தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் பெண்களுக்கு போதுமான சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உத்தேச 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேசிய பட்டியல் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து முக்கிய யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேசியப் பட்டியலின் ஊடாக மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஏற்கனவே இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.ஆயினும், அந்த இணக்கத்தின் அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகளும் நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகளின் நியமனங்களில் ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக கெஃபே அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 556 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், அவர்களில் 11 பேர் மாத்திரமே பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

குறிப்பாக நாட்டின் 52 சதவீதமான பெண்களின் பிரதிநிதித்துவம் தேர்தல் மூலம் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.தேசியப் பட்டியல் ஊடாகவும் ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சிகள் இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண ச​பைகள் மற்றும் பாராளுமன்றத்தில் போதியளவிலான பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.