மார்ச்சுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்
மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
மேற்படி 335 உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லைகளை வரையறுத்தல் மற்றும் புதிய தேர்தல் முறையை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல், இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எல்லை வரையறை மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான விபரங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான தகவல்கள் தற்போது தன்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு 10ஆம் இலக்கச் சட்டத்துக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை, பிரிவுகள் அடிப்படையாகக் கொண்ட கலவை முறையில் நடத்துவதற்கான தேசிய எல்லை நிர்ணயத்துக்கான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சிடம் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி கையளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவ்வறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததாக பொது நிர்வாக மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சு தெரிவித்தது. இந்த அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12ஆம் திகதி கையெழுத்திட்டதை அடுத்து, அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டது.
வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறையானது, கலவை முறை என்ற புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்படவுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 70 சதவீதமானவை பிரிவுகளின் அடிப்படையிலும் 30 சதவீதமானவை மேலதிக பட்டியல் அடிப்படையிலும் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
புதிய தேர்தல் முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். காமினி பொன்சேகாவின் தகவலுக்கமைய, மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இன்றும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படுமாயின், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறையின்படி 335 உள்ளூராட்சி மனறங்களுக்குள் 25 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.