மங்கள தலைமையில் உயர்மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்ட உயர்மட்டக் குழு கலந்துகொள்ளவுள்ளது.
குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.30 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவை தலைவர் ஆகியோரும் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து பிரஸ்தாபிக்க உள்ளனர்.மேலும் இந்த அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என்றும் அதன் விபரங்கள் குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை 30 ஆவது கூட்டத் தொடரின் 30 ஆம் திகதி நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.
இந்த விவாதத்திலும் அமெரிக்கா பிரிட்டன் சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளன. இவற்றுக்கு பதிலளித்து இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க 30 ஆம் திகதி நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படவிருந்தாலும் அதற்கு முன்னர் குறித்த அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ளது.
மேலும் இலங்கை குறி்த்த விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பிரேரணையை அமெரிக்கா மனித உரிமை பேரவையில் முன்வைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குறித்த அறிக்கையின் நன்றாக ஆராய்ந்த பார்த்த பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த உள்ளக விசாரணைக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்றும் கோரும் வகையிலுமேயே அமெரிக்காவின் பிரேரணை அமையவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜயத்தின்போது இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிப்பார் என கூறப்படுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்துக்கான திகதிகளோ அல்லது அது தொடர்பான விபரங்களோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.