அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்
அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய தேசி யக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டது.
அந்த வகையில் பாராளுமன் றம் கூடிய பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பதற்கு தீர்மானமும் எடுக்கப்பட்டது என்று நீதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 இற்கு மேல் அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. அந்தத் தேவைக்காகவே தற்போது அமைச்சரவை பதவியேற்பது தாமதமாகிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு தொடர்ந்து தாமதமடைந்து செல்வது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் விஜய தாஸராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன.
விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்கும் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பகிரும் விடயத்திலும் இரண்டு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது எந்தப்பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்குமிடையில் எவ்வாறு அமைச்சுக்கள் பகிர்வது தொடர்பான இறுதிப்பட்டியல் தயாராகிவிட்டது. இது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் முழுமையான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சரவை பதவியேற்பு தமதமடைவதற்கு காரணம் உள்ளது. அதாவது அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 இற்கு மேல் அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. அந்தத் தேவைக்காகவே தற்போது அமைச்சரவை பதவியேற்பது தாமதமாகிக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் எதிர்வரும் முதலாம் திகதி பாராளுமன்றம் முதல்தடவையாக கூடவுள்ளது. அந்த முதலாவது கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதன்படி முதலாம் திகதி பாராளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டதும் இரண்டாம் திகதி அமைச்சரவை பதவியேற்பதற்கே தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரண்டாம் திகதியிலும் பதவியேற்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் அதற்குப் பின்னர் ஒரு தினத்தில் அமைச்சரவை பதவியேற்கும். எவ்வாறெனினும் எமது எதிர்பார்ப்பு 2 ஆம் திகதி பதவியேற்பதாகும். எனினும் நிலைமையைப் பொறுத்து தீர்மானம் எடுக்கப்படும். நான் இங்கு கூறிய விடயமே அமைச்சரவை பதவியேற்புக்கு காரணமாகும். அதனைவிடுத்து தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையை பகிர்ந்துகொள்ளும் விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்குமிடையில் எந்தப்பிரச்சினையும் இல்லை.