சர்வதேச விசாரணையை விட உள்நாட்டு பொறிமுறை ஆபத்தானது - எச்சரிக்கிறார் குணதாஸ
சர்வதேச விசாரணையை விட தற்போது ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுப்பதாக கூறும் உள்நாட்டு பொறிமுறை ஆபத்தானது.
உள்நாட்டு பொறிமுறை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டால் சர்வதேச நீதிமன்றத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உட்பட 40 இராணுவ வீரர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவர். அதனால் அமெரிக்காவின் இலங்கை மீதான ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்த குற்றம் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்ததையடுத்து 2012 ஆம் ஆண்டு மீண்டும் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக இலங்கை அரசு குறித்த பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையினால் அமெரிக்கா சற்று பின்வாங்கிச் சென்றது.
ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க தயாராகியுள்ளமையினால் அமெரிக்காவின் பக்கம் வலுவடைந்துள்ளது. அதனால் அமெரிக்கா உள்நாட்டு பொறிமுறையமைத்து விசாரணை நடத்துமாறு இலங்கை அரசுக்கு கட்டளை இட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியும் அதன் பின் விளைவுகள் பற்றி அறியாமல் தமது உள்நாட்டு பொறிமுறையமைத்து யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை அமைத்து விசாரணையை முன்னெடுக்கும் பட்சத்தில் அதனால் அமெரிக்கா தமக்கு தேவையான சாட்சியங்களை தொகுத்து சேகரித்துக்கொள்ளும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் 40 இராணுவ வீரர்களும் சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவர்.
ஐக்கிய தேசிய கட்சியின் இந்த காட்டிக்கொடுக்கும் செயற்பாடு வேறு எந்த நாட்டிலும் இடம் பெற்றதில்லை. எமது நாட்டின் சுயாதீன தன்மையை இந்தச் செயற்பாடு இல்லாது செய்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா. அறிக்கை முன்னர் வெளியிடப்பட தருஸ்மன் அறிக்கையையும் உள்ளடக்கியதாகவே அமையும்.
நாம் கடந்த காலங்களிலும் நாட்டு மக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்திருந்தோம். ஆனால் அதனை பொருட்படுத்தாது நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தினை வழங்க தீர்மானித்துள்ளமையினால் மக்களே தற்போது நாட்டின் பாதுகாப்பு மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் வழி செய்ய வேண் டும்.
எவ்வாறாயினும் நாட்டு மக்கள் சுதந் திரமாக வாழ நாட்டை காப்பாற்றி தந்த தலைவர்களை சர்வதேச மட்டத்தில் அழைத்து விசாரணை செய்வதை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் ஒருபோதும் ஏற்காது. எந்த அரசு இவ்வாறன செயற் பாடுகளை முன்னெடுத்தாலும் நாம் அதற்கு எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிடுவோம் என்றார்.